Header Ads

அரேபியர்களின் சர்ச்சைக்குள்ளானது நைக் நிறுவனத்தின் புதிய விளம்பரம்!

பிரபல காலணி தயாரிப்பு நிறுவனமான ‘நைக்’ அண்மையில் வெளியிட்ட இணையதள விளம்பரம் ஒன்று, அரேபியர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விளம்பரத்தில் முஸ்லிம் பெண்கள் ஸ்கேட்டிங், குத்துச்சண்டை, வாற்சண்டை, ஐஸ் ஸ்கேட்டிங் நடனம், குதிரையேற்றம், உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விளம்பரத்தின் முற்பகுதியில், சிறு தயக்கத்துடன் வெளிவரும் முஸ்லிம் பெண்ணொருவர் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுகிறார். மற்றொரு பெண் வீதியில் ஸ்கேட்டிங்கில் ஈடுபடுகிறார். வீதியில் செல்லும் பலரும் அவரை ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். ஆனால் மெல்ல மெல்ல அந்தத் தயக்கங்களை அவர் ஒதுக்கித் தள்ளுகிறார். பின்னணியில் ஒரு பெண் குரல், “அவர்கள் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என்ன பேசுவார்கள்? ஒருவேளை, எல்லோருடைய எதிர்பார்ப்பையும் நீ தகர்த்துவிட்டதாகச் சொல்லக்கூடும்” என்று கூறுகிறது. பின்னர், குத்துச் சண்டை, பெலே நடனம், ஐஸ் ஸ்கேட்டிங் நடனம், வாற்சண்டை போன்ற விளையாட்டுக்களில் முஸ்லிம் பெண்கள் கலந்துகொண்டு வெற்றியடைவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விளம்பரத்தின் இறுதியில், ஒரு சிறு குழந்தை ஐஸ் ஸ்கேட்டிங் நடன அரங்கில் தயங்கியபடியே காலெடுத்து வைக்கிறது. முடிவாக, நைக் நிறுவனத்தின் தாரக மந்திரமான Just Do It (இதைச் செயற்படுத்துவோம்) என்ற வாசகத்துடன் விளம்பரம் நிறைவுறுகிறது.
இந்த விளம்பரம் வெளியாகி இரண்டே நாட்களில் நான்கு இலட்சம் தடவைகள் பார்க்கப்பட்டுள்ள அதேவேளை, இது குறித்து ஆதரவும், எதிர்ப்புமான விமர்சனங்கள் பரவி வருகின்றன.
அரேபியாவில் உள்ள பெண்களை அசிங்கப்படுத்திவிட்டது நைக் என்று ஒரு சாராரும், அரேபியாவில் விளையாட்டின்பால் ஆர்வமுள்ள பெண்கள் சந்திக்கும் சவால்களை உடைத்தெறிய இந்த விளம்பரம் தூண்டுகிறது என்று ஒரு சாராரும் வாதிட்டு வருகின்றனர்

No comments:

Powered by Blogger.